கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தில் மிகவும் பழமையான அருள்மிகு பூ மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி கோஷம் முழங்க அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
இதையொட்டி கோவில் வளாகத்தின் முன்பாக சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் கலசங்களில் வைத்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோமாதா பூஜை, கணபதி பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் முதல் கால யாகசாலை பூஜை சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதியபடி இரண்டாம் கால யாகசாலை பூஜையை நடத்தினர். பின்னர் கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பூஜை செய்யப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் நிரப்பப்பட்ட கலசங்கள் மங்கள இசையுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.
பின்னர் கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலவர் அம்பாளுக்கும், பரிவார தெய்வங்களான ஸ்ரீ விநாயகர், முருகர் மற்றும் பூ மாரியம்மன் சன்னதிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சக்தி கோஷம் முழங்க அம்மனை தரிசித்து வழிபட்டனர். விழாவையொட்டி கிராமம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.


No comments:
Post a Comment